காவிரி பிரச்சினை எப்படி ஏற்பட்டது , என்னதான் நடந்தது ஒரு
சுருக்கமான நினைவூட்டல் வரலாறு
முதல் உடன்படிக்கை 1892,1924
1892-ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூர்
சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர் பகிர்வு உடன்படிக்கை செய்யப்பட்டது.
1924 அங்கே மைசூர் - கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையையும், இங்கே
மேட்டூர் அணையையும் அடிப்படையாக வைத்து, இந்திய அரசின் மேற்பார்வையில் சென்னை
மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் 50 ஆண்டு கால உடன்படிக்கை
செய்யப்பட்டது.
1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும்
1924 ஒப்பந்தப்படியே காவிரி நீர் பகிர்வு நடந்துவந்தது.
1956-ல் மொழிவழி
மாநில மறு சீரமைப்புக்குப் பின், குடகு கர்நாடகத்தின் பகுதி ஆயிற்று.
1954-ல் புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் புலம்
(யூனியன் பிரதேசம்) ஆயிற்று. புதுவையின் ஒரு பகுதியான காரைக்கால் காவிரி நீரால்
பயனடைந்துவந்தது.
1960-ல் கபினி நீரில் பங்கு கேட்டு குதித்த கேரளா
கபினியின் பிறப்பிடம் மொழிவழிக் கேரளத்தில் அமைந்திருந்தது. ஆகவே,
புதிதாக கேரளமும் புதுவையும் காவிரி நீரில் பங்கு கேட்டன. பேச்சுவார்த்தை
1960-களின் முற்பகுதியில் தொடங்கி, 10 ஆண்டு காலம் நீண்டது.
அதிக பாசனப் பரப்பு கொண்ட தமிழகம்
1970-களில் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு கண்டறிந்தபடி,
தமிழ்நாட்டின் காவிரி நீர்ப்பாசனப் பரப்பு 25.80 லட்சம் ஏக்கர் என்றும்,
கர்நாடகத்தின் நீர்ப்பாசனப் பகுதி 6.80 லட்சம் ஏக்கர் என்றும் தெரியவந்தது.
இருபுறமும் நீர்ப்பாசனப் பகுதி குறித்த சர்ச்சைகளின் ஆரம்பமே
காவிரிப் பிரச்சினையின் முதல் பிரச்சினைக்கு வித்திட்டது. தமிழகம் தனது 25.8 லட்ச
ஏக்கர் நிலப்பரப்பை சுருக்க விரும்பாததும், கர்நாடக தனது 6.8 லட்ச ஏக்கர்
நீர்ப்பாசனப் பகுதியை அதிகரிக்க நினைத்ததும் பிரச்சினைக்கு காரணமாகின.
உச்ச நீதிமன்ற வழக்கு
1974-ல் ஒப்பந்தம் முடிந்த பிறகும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள்
நடந்தன. உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்குத் தொடர்ந்தது, அன்றைய பிரதமர்
இந்திராகாந்தி கேட்டுக்கொண்டதால் தமிழகம் வழக்கை திரும்பப் பெற்றது.
சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய அரசமைப்பில் மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பகிர்வு
தொடர்பான பகுதி 262 இந்திய அரசின் பொறுப்பைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பிரச்சினைகளுக்கான சட்டம், 1956
என்பது தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) அமைப்பதற்கான வழிவகையைக் கொண்டுள்ளது.
தீர்ப்பாய கோரிக்கையை வைத்த எம்ஜிஆர், அமைத்துக்கொடுத்த வி.பி.சிங்
பல கட்சிகள் தலைமை தாங்கிய தேசிய முன்னணி ஆட்சியில்தான் காவிரி
தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. 1986-ல் தமிழக அரசு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற
கோரிக்கையை எழுப்பியது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி 1990 ஜூன் 2-ம் நாள் பிரதமர்
வி.பி.சிங் தலைமையிலான இந்திய அரசு, காவிரித் தீர்ப்பாயம் அமைத்தது.
தீர்ப்பாயத்திடம் ஒவ்வொரு மாநிலமும் கேட்ட தண்ணீரின் அளவு கர்நாடக
465 டிஎம்சி, தமிழகம் 566 டிஎம்சி, கேரளா 99.8 டிஎம்சி, புதுவை 9.3 டிஎம்சி.
தீர்ப்பாயத்திடம் நியாயம் கிடைக்காததால் உச்ச நீதிமன்றம் போன தமிழக
அரசு
தங்களுக்கான தண்ணீரைத் திறக்க ஆணையிடுமாறு தீர்ப்பாயத்திடம்
தமிழ்நாடு கோரிக்கை வைத்தது. தீர்ப்பாயம் இதை ஏற்க மறுத்ததால், தமிழ்நாடு அரசு
உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றக் கட்டளைப்படி தீர்ப்பாயம் மறு
பரிசீலனை செய்து இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்ற இடைக்கால தீர்ப்பும், கர்நாடகாவின் அவசரச் சட்டமும்
1980-81க்கும் 1989-90க்கும் இடைப்பட்ட 10 ஆண்டு சராசரியைக்
கணக்கிட்டு, ஒவ்வொரு நீர்ப்பாசன ஆண்டிலும் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு 205 டிஎம்சி
நீர் வழங்க வேண்டும் என்பதே இடைக்காலத் தீர்ப்பு.
மாத வாரியாகவும், அந்தந்த மாதமும் வாரவாரியாகவும் கர்நாடகம் திறந்து
விட வேண்டிய நீரின் அளவும் வரையறுக்கப்பட்டது.
கர்நாடகம் அதன் பாசனப் பரப்பை அப்போதைய 11,20,000 ஏக்கருக்கு மேல்
விரிவுபடுத்தக் கூடாது என்றும் தீர்ப்பாயம் ஆணையிட்டது.
இந்த இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு அவசரச் சட்டம்
பிறப்பித்தது. பின்னர், குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டபடி, உச்ச நீதிமன்றம்
தலையிட்டு அந்த அவசரச் சட்டத்தை நீக்கியது.
1991 வன்முறை
தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 டிசம்பர் 11 அன்று
அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் கட்டுக்கடங்காத வன்முறை
வெடித்தது. தமிழர்களுக்கு எதிராகக் கொலைகளும், கொள்ளையும் தீவைப்பும் நிகழ்ந்தன.
ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் அகதிகளாக வெளியேறித் தமிழகம் வந்து சேர்ந்தன.
1992, 1993, 1994 ஆண்டுகளில் போதிய மழைப் பொழிவு இருந்ததால்,
பெரிதாகச் சிக்கல் எழவில்லை. 1995-ல் பருவமழை பொய்த்ததால் தீர்ப்பாயத்தின்
இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று கர்நாடகம் மறுத்துவிட்டது.
தோல்வியில் முடிந்த காவிரி ஆற்று ஆணையம்
1997-ல் இந்திய அரசு காவிரி ஆற்று ஆணையம் அமைத்தது. இது பிரதமரையும்
நான்கு மாநில முதல்வர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது. எல்லா உறுப்பினர்களும்
கலந்துகொண்டால்தான் இந்த ஆணையம் கூட முடியும். கூடினாலும் ஒருமனதாக மட்டுமே
முடிவெடுக்க முடியும். கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த ஆணையம்
அதிகாரமற்றதாக மாற்றப்பட்டது. இந்த ஆணையத்தால் ஒரு பயனும் விளையவில்லை.
தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு
2007 பிப்ரவரி 5 அன்று தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியது.
கொள்ளிடம் கீழணை வரைக்கும் காவிரி வடிநிலத்தில் ஓராண்டு காலத்தில் கிடைக்கும்
மொத்த நீரின் அளவு 740 டிஎம்சி. இதில் இறுதித் தீர்ப்பின்படி சுற்றுச் சூழல்
பாதுகாப்புக்கும் கடலில் கலப்பதற்கும் 14 டிஎம்சி ஒதுக்கியது போக, தமிழகத்துக்கு
419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுவைக்கு 7
டிஎம்சி ஒதுக்கி உத்தரவிட்டது.
205 டிஎம்சி
192 டிஎம்சியாக குறைக்கப்பட்ட கதை
தமிழகத்துக்கு உரிய பங்கான 419 டிஎம்சியில் தமிழ்நாட்டுக்குள்
பொழியும் மழை அளவில் கிடைத்தது போக, கர்நாடகம் திறந்துவிட வேண்டிய அளவுதான் 192
டிஎம்சி.
கர்நாடகம் காவிரியில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய நீரின்
அளவு (டிஎம்சி) இடைக்காலத் தீர்ப்பில் 205 ஆக இருந்து, இறுதித் தீர்ப்பில் 192
ஆகக் குறைந்துபோனது.
இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் மாதவாரியாகத்
திறந்துவிட வேண்டிய நீரளவு பின்வருமாறு :
ஜூன்: 10, ஜூலை: 34, ஆகஸ்ட்: 50, செப்டம்பர்: 40, அக்டோபர்: 22,
நவம்பர் 15, டிசம்பர்: 8, ஜனவரி: 3, பிப்ரவரி: 2.5, மார்ச்: 2.5, ஏப்ரல்: 2.5, மே:
2.5.
ஒரு மாதத்தில் தண்ணீர் குறைவாகக் கொடுத்தால், அடுத்தடுத்த மாதங்களில்
அந்த நிலுவையைக் கொடுத்துக் கணக்கை நேர் செய்ய வேண்டும். பற்றாக்குறை காலத்தில்
எவ்வளவு குறைவாகக் கிடைத்தாலும் இதே விகிதப்படி பகிர்ந்துகொள்ள வேண்டும். இதை
கர்நாடகம் விடாப்பிடியாக இன்றுவரை எதிர்த்து வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம்
மத்திய அரசின் நழுவல்
தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியமும்
(Cauvery Management Board) காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும்.
உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த
ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உச்ச நீதிமன்ற
உத்தரவை நாடாளுமன்றத்தில் வைத்து அதன் பின்னே நிறைவேற்றுவோம் என்று தமிழகத்துக்கு
பாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுத்ததால் இன்றுவரை காவிரிப் பிரச்சினையில் தீர்வு
காணப்பட்டவில்லை.
டிஎம்சி அளவு குறைப்பு
முதலில் 205 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்ற உத்தரவை கர்நாடக அரசு
அமல்படுத்த மறுத்து உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில் தீர்ப்பாயம் மூலம் 192
டிஎம்சியாக குறைக்கப்பட்டது. பின்னர் அதுவும் இன்றைய தீர்ப்பில் 177 டிஎம்சியாக
குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிலத்தடி நீரை முதன்முறையாக கணக்கில் எடுத்து
இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதை தமிழக விவசாயிகள் எதிர்க்கிறார்கள்.
10 லட்சம் ஏக்கர் பாசனத்தை இழந்தோம்
தமிழகத்தின் பாசனப்பகுதி தொடர்ச்சியான காவிரி பிரச்சனை காரணமாக 15
லட்சமாக குறைந்துள்ளதாக விவசாய சங்கத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகமும்
இந்தியாவில்தான் உள்ளது. தமிழக உற்பத்தியும் இந்தியாவின் உற்பத்திதான் என்பதை
அரசியல் தாண்டி உணர வேண்டும்.
No comments:
Post a Comment